சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தில் தலாபாரம் பகுதியை சேர்ந்தவர் முகமது மோபின் (32). இவர் தனது மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் முகமது தனது மனைவிக்கு அதே பகுதியில் உள்ள ஜெய்பால் சாகு (35) என்ற பால் வியாபாரியுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து வந்துள்ளார்.

அதனால் சம்பவ நாளன்று முகமது, ஜெய்பால் வழக்கம்போல தனது பைக்கில் பால் வினியோகம் செய்ய சென்றபோது நடுத்தெருவில் வைத்து ஜெய்பாலின் தலையில் கோழி வெட்டும் கத்தியால் அடித்து, உடல் முழுவதும் 22 முறை சரமாரியாக வெட்டியுள்ளார். இந்தக் கொடூர தாக்குதலில் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் தரையில் ரத்த வெள்ளத்தில் ஜெய்பால் துடிதுடித்து கிடந்துள்ளார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவசர அவசரமாக சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஜெய்பாலை அனுமதித்துள்ளனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சி ஒன்றில் இச்சம்பவம் பதிவாகி இருந்ததை கண்டறிந்தனர்.

இதனை அடுத்து முகம்மதை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில், தனது மனைவியை விட்டு பிரிந்ததற்கு காரணம் ஜெயபால்தான். அவர்களுக்குள் கள்ளத்தொடர்பு இருந்ததால் இவ்வாறு செய்ததாக முகமது ஒப்புக்கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.