ஈரோடு மாவட்டத்திலுள்ள பெரியவலசு கொத்துக்காரர் வீதியில் கூலி வேலை பார்க்கும் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இவர் தறிபட்டறை தொழிலாளி. இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியா கடந்த 6 மாதமாக கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் வீரப்பன்சத்திரம் பாரதி தியேட்டர் அருகே வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று செந்தில்குமார் தன்னுடன் வாழ வருமாறு பிரியாவை அழைத்துள்ளார்.

அதற்கு பிரியா மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த செந்தில்குமார் கத்திரிக்கோலால் பிரியாவின் கழுத்து, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதற்கிடையில் பிரியாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் செந்தில்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.