
புனேவைச் சேர்ந்த அன்னா செபாஸ்டியன் என்பவர் எர்ன்ஸ்ட் & யங் (EY) நிறுவனத்தில் பணியாற்றிய போது, பணிச்சுமை காரணமாக உயிரிழந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
26 வயதான அன்னா செபாஸ்டியன், தனது முதல் வேலைக்கு மிகுந்த ஆவலுடன் சென்றார். எனினும், 4 மாதங்களிலேயே, அதிக பணிச்சுமையால் அவர் தனது உயிரை இழந்தார். அவரது தாயார் அனிதா, இந்த துயரத்தை கடிதம் மூலம் பகிர்ந்து, எர்ன்ஸ்ட் & யங் நிறுவனத்தின் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அன்னாவின் தாயார் எழுதிய கடிதத்தில், அவரது மகள் நீண்ட நேரம், வார இறுதிகள் போன்ற காலங்களிலும் வேலை செய்ய நேர்ந்ததையும், தொடர்ந்து மேலாளர் பணி முடிந்தபின்னரும் வேலை கொடுத்ததையும் குற்றமாக கூறியுள்ளார். இது மட்டுமின்றி, அன்னாவிற்கு தகுதிக்கு மீறிய பணிகளும் வழங்கப்பட்டதாகவும், அவர் அதனை மனதும் உடலும் சோர்ந்தபடி செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதம் சமூக ஊடகங்களில் வைரலாகி, பலரின் கவனத்தை ஈர்த்த நிலையில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இதை வழக்காக எடுத்துச் சரிவர விசாரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.