
சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் மின்சார ரயில் ஒன்று அரக்கோணம் நோக்கி புறப்பட்டது. இந்த ரயில் கொரட்டூர் ரயில் நிலையத்தை அடைந்தபோது, அதில் பயணித்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது சில வாலிபர்கள் சரமாரியாக கற்களை வீசினர். இந்த தாக்குதல் நிகழ்ந்த இடமே போர்க்களம் போல் மாறியது. இதனால் ரயிலில் இருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் பரபரப்புடன் சுற்றியோடினர். இந்த சம்பவத்தை சிலர் செல்போனில் பதிவு செய்தனர். இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர்கள் வீடியோ எடுக்கப்பட்டதை உணர்ந்ததும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து பெரம்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது , தாக்குதலில் ஈடுபட்டது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்று தெரிய வந்தது. இதனையடுத்து, திருவள்ளூர் மற்றும் ஆவடி பகுதிகளைச் சேர்ந்த 9 பேர், அவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவர், கைது செய்யப்பட்டனர்.
பெரம்பூர் ரயில்வே எஸ்பி ஈஸ்வரன் தலைமையிலான காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராமில் “லாவண்யா” என்ற பெயரில் உள்ள ஒரு போலி ஐடியிலிருந்து “மாநிலக் கல்லூரி மாணவர்கள் கெத்து, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வேஸ்ட்” என்கிற வகையில் பதிவுகள் செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதனால் தவறான புரிதலுக்கு உட்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், மாநிலக் கல்லூரி மாணவர்களை தாக்கியதாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து, சிறுவர்களை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பியும், மற்றவர்களை சிறையில் அடைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.