
டெல்லியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர் தனது ஆசிரியரின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இதனால் அவர் வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படவில்லை. இது எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதி மாணவருக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கவும் அவரை பள்ளியில் மற்றொரு கிளைக்கு மாற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பள்ளிகளில் செல்போன் பயன்பாட்டிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கேந்திரிய வித்யாலயா பள்ளி கோரியதை அடுத்து நீதிமன்றம் சீர்திருத்த தீர்ப்பை வழங்கியது. அதில் மாணவர்கள் பள்ளிக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
ஆனால் பொழுதுபோக்கிற்காக அதை பயன்படுத்தக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் விதிமுறைகள் நியாயமான முறையில் அமல்படுத்தப்பட வேண்டும். ஆனால் மிகுந்த கடுமையுடன் நடந்து கொள்ளக் கூடாது என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. செல்போன்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பறிமுதல் செய்தல் அல்லது சில நாட்கள் பள்ளிக்கு கொண்டு வருவதை தடை செய்தல் போன்ற நடவடிக்கைகள் தேவையானவை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் வகுப்பறைகளில் செல்போன் பயன்பாட்டை தடுக்கும் விதியாக பொது இடங்கள் மற்றும் பள்ளி வாகனங்களில் கேமரா மற்றும் பதிவு செய்யும் வசதிகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.