சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரில் சௌமியா என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 5 வயதுடைய புஷ்கர் சாய் என்ற மகன் உள்ளார். இவர் திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே அமைந்துள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் யுகேஜி படித்து வருகின்றார். இந்நிலையில் பள்ளியிலிருந்து குழந்தையை சௌமியா வீட்டிற்கு அழைத்துக்கொண்டு எல்லையம்மன் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது எழும்பூரிலிருந்து எண்ணூர் வரை செல்லும் 28B பேருந்தில் ஏறி உள்ளார். இதில் பேருந்து தேரடியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது பேருந்து கதவை ஓட்டுநர் மூடியுள்ளார்.

இந்நிலையில் குழந்தையின் கைவிரல் கதவுகளின் நடுவே சிக்கிக் கொள்ள குழந்தையும் தாயும் கதவை திறக்கும் படி கத்தியுள்ளனர். மேலும் பயணிகளும் அலறி கூச்சலிட்டதில் ஓட்டுநர் உடனடியாக கதவை திறந்து உள்ளார். அப்போது ரத்தம் சொட்ட சொட்ட சிறுவனின் கைவிரல்கள் நசுங்கி இருப்பதை கண்டு தாய் சௌமியா கதறி அழுதுள்ளார். பின்னர் அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதில் குழந்தையை பரிசோதித்து செய்து பார்த்த மருத்துவர் விரல் நசுங்கியதால் தையல் போட வேண்டும் என கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருவெற்றியூர் காவல் துறையினர் ஓட்டுநர் மற்றும் நடத்துனாரிடம் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.