இந்திய கல்வி முறையில், தேர்ச்சி மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று வேலை சந்தையில், உண்மையான திறமைகளே முக்கியமாக பார்க்கப்படுகின்றன. இதற்காகவே தற்போது “மதிப்பெண்கள் அல்ல, திறன்கள் தான் முதன்மை” என்ற வரிசையில் ஒரு உணர்ச்சி மிகுந்த பதிவு, இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

டெல்லியில் உள்ள ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் பிஸ்மா ஃபரீத் என்ற மாணவி, தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பகிர்ந்த பதிவு பலரது மனதைத் தொட்டுள்ளது. பிஸ்மா தனது பதிவில், “நான் டாப்பர்… ஆனா எனக்கு இன்டர்ன்ஷிப் கிடைக்கலை!” எனத் தொடங்கி, “அதிக மதிப்பெண்கள் வாங்கினாலும், என் கையிலுள்ள சான்றிதழ்கள், மெடல்களால் எந்த வேலை வாய்ப்பும் வரலை.

எனக்கு ஆச்சரியமா இருந்தது… எல்லா ரெக்ரூட்டர்களும் ஒரே கேள்விதான் கேட்டாங்க: ‘உங்க ஸ்கில் என்ன?’ மதிப்பெண்கள் பற்றி யாரும் கேட்கவே இல்ல.” என மனதளவில் ஏற்பட்ட பயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“என் ஆசான்களும், பேராசிரியர்களும், உறவினர்களும் எல்லாம் ‘படிச்சா போதும்’ன்னு சொன்னாங்க. ஆனா என்னோட திறமைதான் இங்கு வேணும்! அதைக் கூட நான் தயார் பண்ணிக்கவே இல்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“நீங்க 10ஆம் வகுப்புல எவ்வளவு வாங்கீங்கனு யாருக்குமே ஞாபகம் இல்ல…” என்று பதிவு முடிக்கிறார் பிஸ்மா. “ஒரு திறனை தேர்வு பண்ணுங்க… அதை நன்கு கற்றுக்கோங்க. அப்புறம் வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரத்தான் போகுது!” என்றார் அவர்.

இந்த பதிவு குறுகிய நேரத்தில் வலைதளத்தில் வைரலாக பரவி பலரிடம் விமர்சனங்களை பெற்றது. அதில் ஒருவர் “நமது கல்வி முறைதான் இது. மதிப்பெண்கள் மட்டும் போதாது. வளர்ச்சி என்கிற உண்மையான திறனை எடை போடவேண்டும்.” என்று கூறினார்.