
கர்நாடக மாநிலம் பொன்னம்பேட்டை தாலுகாவில் பேகுரு என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் கிரிஷ் – நாகி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகும் நிலையில் 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் கிரிஷ் நேற்று முன்தினம் தன்னுடைய மனைவி, மகள் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டார். இது தொடர்பாக அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அங்கிருந்த உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தற்போது தலைமறைவாகியுள்ள கிரிஷை தேடி வந்த நிலையில் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.