
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தின் சுயேட்சை எம்எல்ஏ தேவேந்திர புயார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், அழகான பெண்கள் விவசாயிகளை திருமணம் செய்ய விரும்ப மாட்டார்கள் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். இந்த பேச்சு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புயார் கூறியதாவது, “அழகான பெண்கள் விவசாயிகளை திருமணம் செய்ய விரும்ப மாட்டார்கள், அவர்கள் வேலை செய்யும் ஆண்களை மட்டுமே தேர்வு செய்வார்கள்”, அதேபோன்று சற்றே அழகு குறைந்த பெண்கள், மளிகை கடை நடத்துபவரை திருமணம் செய்து கொள்கின்றனர், மூன்றாவது இடத்தில் இருக்கும் பெண்கள் விவசாயியின் மகனை திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று கூறினார்.
புயாரின் இந்த கருத்துக்கு பல தரப்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மகாராஷ்டிராவின் முன்னாள் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி யஷோமதி தாகூர் உடனே இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, பெண்களை இவ்வாறு வகைப்படுத்துவதை சமூகம் எப்போதும் ஏற்காது என்றும், இதற்கான எதிர்வினை கடுமையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த வகையான கருத்துகள் விவசாயிகள் மற்றும் பெண்கள் மீதான முறையான மதிப்பீட்டை குறைக்கும் விதமாக இருப்பதால், சமூகத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.