
அமெரிக்காவின் நியூயார்க் நகரம், குயின்ஸில் வசித்து வந்த 36 வயது மரியா பெனலோசா கப்ரேரா என்ற இளம் தாய், உரிமம் பெறாத ஒரு மருத்துவரால் செய்யப்பட்ட ஒரு தவறான அழகுசாதன அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தார்.
மார்ச் 28ஆம் தேதி அவரது வீட்டிலேயே இந்த அறுவை சிகிச்சை நடந்து, சிகிச்சைக்கிடையே அவர் கார்டியாக் அரெஸ்டால் சரிந்து கீழே விழுந்தார். அதன் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஏப்ரல் 11ஆம் தேதி பலனின்றி உயிரிழந்தார்.
இந்த மர்ம மருத்துவராக நடித்தவர் பெலிபே ஹொயோஸ்-ஃபொரோண்டா (38) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் லிடோகெயின் என்ற மருந்தை மரியாவின் உடலில் ஊசி மூலம் செலுத்தியதும், அவர் திடீரென கார்டியக் அரெஸ்ட்டுக்கு உள்ளானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும், மூளை செயலிழப்புடன் அவர் தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்தார். விசாரணையில், ஹொயோஸ்-ஃபொரோண்டா TikTok போன்ற சமூக வலைதளங்களில் தன்னை ஒரு அழகு சிகிச்சை நிபுணராக விளம்பரப்படுத்தி வந்ததும், தள்ளுபடி விலையில் முறைகேடான முறையில் பலரை சிகிச்சை செய்ததும் தெரியவந்துள்ளது.
சம்பவத்துக்குப் பிறகு ஹொயோஸ்-ஃபொரோண்டா, ஜேஎஃப் கே சர்வதேச விமான நிலையத்தில் கொலம்பியா நாடு செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது மருத்துவ அனுமதியின்றி சிகிச்சை செய்தது மற்றும் இரண்டாம் நிலை தாக்குதல் என்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மரியாவின் மரணம் தொடர்பான, பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், இது ஒரு மருத்துவ தவறால் ஏற்பட்ட மரணம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இரண்டு குழந்தைகளை விட்டு மரணம் அடைந்த மரியாவின் குடும்பம், தற்போது GoFundMe வழியாக USD 20,000 நிதியை திரட்ட முயற்சி செய்து வருகின்றது. தற்போது வரை USD 6,000 மட்டுமே திரட்டப்பட்டுள்ளது.