
அமெரிக்காவின் பாஸ்டன் பகுதியில் செயல்படும் ‘கிராடியன்ட்’ என்ற உலகளாவிய குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அனுராக் பஜ்பாய். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் உயர்தர விபச்சார விடுதிகளில் தொடர்பு வைத்திருந்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடந்ததாக கூறப்படும் இந்த வழக்கில், பஜ்பாய் உள்ளிட்ட பலர், ஆசிய பெண்களிடம் பாலியல் சேவைக்காக அதிக தொகை செலுத்தியதாக புகார் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க நீதித்துறையின் அறிக்கைகளில், பஜ்பாய், அரசு அதிகாரிகள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அரசாங்க ஒப்பந்ததாரர்கள் ஆகியோரின் பட்டியலில் உள்ள முக்கியமான நபராக குறிப்பிடப்பட்டுள்ளார். இது தொடர்பாக நடந்த விசாரணையில், ஒரு மணி நேரத்துக்கு $600 வரை செலுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த பெண்கள் பாலியல் கடத்தலுக்குள்ளானவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. ஆனால், பஜ்பாய் நிறுவிய கிராடியன்ட் நிறுவனம் அவருக்கு ஆதரவாக செயல்பட்டு, நீதிமன்றத்தின் முடிவை மதிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அனுராக் பஜ்பாய், இந்தியாவில் பிறந்து, MIT-யில் இயந்திரவியல் துறையில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர். 2013ஆம் ஆண்டு கிராடியன்ட் நிறுவனத்தை நிறுவி, உலகம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட வைக்கும் அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளார். அவர் உருவாக்கிய ‘மெம்பிரேன் இல்லாத உப்பு நீக்கும் தொழில்நுட்பம்’ Scientific American பத்திரிகையில் உலகத்தை மாற்றக்கூடிய 10 கண்டுபிடிப்புகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பஜ்பாயுடன் கேம்பிரிட்ஜ் நகர மன்ற உறுப்பினர் பால் டோனர் என்பவரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். பால் டோனர் தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டும், பதவியை விலக்க மறுத்தும் உள்ளார். இந்த வழக்கு தற்போது தொடர்ந்து விசாரணை நிலையிலேயே உள்ளது. பாலியல் கடத்தல், சமூகத் தாக்கங்கள் மற்றும் உயர் பதவியிலுள்ள நபர்களின் ஈடுபாடு ஆகியவை காரணமாக, இந்த வழக்கு தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.