தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் விளம்பரத்தை பார்த்து அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டு இருந்த முகவரிக்கு தொடர்பு கொண்டு மருத்துவ உபகரணங்கள் ஆர்டர் செய்துள்ளார். இதற்காக ரூபாய் 3 லட்சம் பணம் அந்த  நிறுவனத்திற்கு செலுத்தி உள்ளார்.

ஆனால் அந்த மருத்துவ உபகரண நிறுவனத்தில் இருந்து எந்தவித மருத்துவ உபகரணங்களும் வரவில்லை. பணமும் திருப்பி கொடுக்கபடவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண் இச்சம்பவம் குறித்து சைபர் கிரைம் குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் உத்தரவில், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி சகாய ஜோஸ் ஆகியோர் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் தொழில்நுட்ப ரீதியாக விசாரணையை நடத்தினர்.

இந்த விசாரணையில் மருத்துவ உபகரண விளம்பரம் வெளியிடப்பட்ட நிறுவனத்தினை கண்டறிந்து அவர்களது வங்கி கணக்கை முடக்கம் செய்தனர். மேலும் அந்த வங்கி கணக்குடன் சம்பந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொண்டு மோசடி செய்யப்பட்ட ரூபாய் 3 லட்சம் பணம் திரும்ப பெறப்பட்டது.

மேலும் அந்த விளம்பரம் வெளியிட்ட நிறுவனம் குறித்து சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து ஏப்ரல் 8ஆம் தேதி மீட்கப்பட்ட ரூபாய் 3 லட்சம் பணத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து பணத்தை பறிக்கொடுத்த பெண் உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.