
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் முகமது பாசிக்(13), உபயதுல்லா(8), முகமது அபில்(10) என்ற 3 சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர். இவர்கள் மூவரும் சேர்ந்து நேற்று வெள்ளையங்கால் ஓடையில் குளிப்பதற்காக தனியாக சென்றனர். அப்போது ஓடையில் விளையாடிக்கொண்டே குளித்துக் கொண்டிருந்த போது சிறுவர்களில் ஒருவர் ஆழமான பகுதி என அறியாமல் சென்றதால் தண்ணீரில் மூழ்கினார்.
உடனடியாக அவனை காப்பாற்ற சென்ற 2 சிறுவர்களும் ஆழமான பகுதியில் சிக்கிக்கொண்ட நிலையில் வெளியே வர முடியாமல் தண்ணீரில் மூழ்கினர். இதனை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பார்த்த நிலையில் உடனடியாக சிறுவர்களை காப்பாற்றுவதற்காக ஓடையில் இறங்கினர். இந்த தகவல் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
கிட்டத்தட்ட 2 மணி நேர தேடுதலுக்குப் பின் சிறுவன் உபயதுல்லா உடலை மீட்பு பணியினர் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து 2 சிறுவர்களின் உடலும் மீட்கப்பட்டது. பின்னர் சிறுவர்களின் உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.