கேளம்பாக்கம் அருகே பாலமா பகுதியில் வசித்து வருபவர் ஹரிதாஸ்(34). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுகந்தி. இவர்கள் இருவருக்கும் லியோ டேனியல்(10), ஜோ டேனியல்(5) என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். சம்பவ நாளில் ஹரிதாஸ் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் மாமியார் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக சென்றார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து இரவு 11 மணிக்கு தனது குடும்பத்தினருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய நிலையில் தையூர் பகுதியில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக வேகமாக வந்த கார் ஹரிதாஸ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஹரிதாஸ் அவரது மனைவி மற்றும் மகன் லியோ டேனியல் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களுடைய மற்றொரு மகன் ஜோ டேனியல் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உயிரிழந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் காரில் வந்த நபர் காயார் கிராமத்தில் வசித்து வரும் அஸ்வின் குமார் என்பது தெரியவந்தது. கேளம்பாக்கத்தில் செருப்பு கடை வைத்து வியாபாரம் நடத்தி வரும் இவர் தனது மனைவி பிந்து மற்றும் மகன் அபினேஷ் பால்மோனியுடன் கடையிலிருந்து வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது. மேலும் காவல் துறையினர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்பட்டது.