
மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பறவைக் காய்ச்சல்(H5N1) அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கர்நாடகா எல்லை மாவட்டங்களான பெலகாவி, பிடார், பெல்லாரி மற்றும் ராய்ச்சூர் ஆகிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் கடந்த திங்கட்கிழமை அன்று நடைபெற்ற கூட்டத்தில் சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ஹர்ஷ் குப்தா, கோழிப் பணியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்தும் கோழிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கர்நாடகாவில் தற்போது வரை எந்த ஒரு தொற்றும் ஏற்படவில்லை. இருப்பினும் நோய் தொற்று வேகமாக பரவுவதை தடுக்க நாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம் என்று அவர் கூறினார். கடந்த 17ஆம் தேதி அன்று, பெலகாவி மற்றும் பிடார் மாவட்டங்களில், கோழி விற்பனை குறைந்துள்ளது. நோய் தொற்று மீதுள்ள பயத்தின் காரணமாக, கோழியின் விற்பனை குறைந்துள்ளதாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் பலரும் கூறி வருகின்றனர்.