
ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்நாடு மாவட்டத்தில் நரசராவ் பேட்டையைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு பறவை காய்ச்சல் இருந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த மாதம் 4 ஆம் தேதி அதிக காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், மூக்கிலிருந்து நீர் வடிதல், வயிற்றுப்போக்கு மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதால் சிறுமியின் பெற்றோர்கள் மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுமியை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த சிகிச்சையின் போது தொண்டை மற்றும் மூக்கில் இருந்து சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு டெல்லியில் உள்ள ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கிடையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் பின் கடந்த 24ஆம் தேதி புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்ட சளி மாதிரிகள் பரிசோதனை முடிவில் சிறுமிக்கு எச்பி 5என்1 என்ற பறவை காய்ச்சல் நோய் இருந்தது தெரியவந்துள்ளது.
உடனே இது குறித்து மருத்துவமனை மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சிறுமியின் இறப்பு குறித்து விசாரணையில் ஈடுபட்டனர். அந்த விசாரணையில் சிறுமி செல்லப்பிராணிகளுடனும், தெரு நாய்களுடனும் விளையாடி உள்ளது தெரியவந்தது. மேலும் சிறுமி நோய்வாய்ப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன் கடையில் விற்கப்பட்ட வேக வைக்காத கோழி துண்டுகளை வாங்கி சாப்பிட்டதும், இதனைத் தொடர்ந்து சிறுமிக்கு காய்ச்சல், சளி போன்ற நோய் தொற்று ஏற்பட்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து சுகாதாரத்துறை அமைச்சகம், பொதுமக்களை விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், பறவை காய்ச்சல் உள்ள பகுதிகளுக்கு செல்லக்கூடாது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள் மற்றும் முதியவர்களை பாதுகாக்க வேண்டும். நோய்வாய்ப்பட்ட கோழிக்கறிகளை வாங்கி சாப்பிடக்கூடாது. கோழிக்கறிகளை 100 டிகிரி செல்சியஸ் அதி வெப்பநிலையில் வேகவைத்து சாப்பிட வேண்டும் என தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.