சேலம் மாவட்டம் திருவாக்கவுண்டனுரில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார், அப்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரைக்கும் நாம் ஏற்கனவே அறிவித்து விட்டோம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலே பிரம்மாண்டமான கூட்டணி  அமைத்து போட்டியிடுவது என்று அறிவிக்கப்பட்டு விட்டது.

நம்முடைய தொண்டர்களின் உணர்வை…  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய 2 கோடி தொண்டர்களின் உணர்வை…  தலைமை கழகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலே,  தலைமைக் கழக நிர்வாகிகள் – மாவட்டக் கழக செயலாளர் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சட்டமன்ற உறுப்பினர்களுடைய கருத்துக்களை தெரிவித்தார்கள்.

ஆகவே இரண்டு கோடி தொண்டர்களுடைய உணர்வுகள் அந்த ஆலோசனை கூட்டத்திலே தெரிவிக்கப்பட்டது. அந்த உணர்வின் அடிப்படையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,  பாரதிய ஜனதா கட்சியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் விலகிக் கொள்கிறது என்ற முடிவை எடுத்தது. அதோடு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்ளும் என்ற முடிவையும் எடுத்தது.

இது பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் எடுத்த முடிவு அல்ல. ஒட்டு மொத்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களும் எடுத்த முடிவு. அவர்களுடைய உணர்வுகளை பிரதிபலிக்கின்ற விதமாக அன்றைய தினம் தலைமைக் கழகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பதை இந்த தருணத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஏன்னா பத்திரிக்கையிலும்,  ஊடகத்திலும் விவாதத்தில் பங்கு பெறுகின்ற நண்பர்கள் இன்னும் எடப்பாடி பழனிச்சாமி கருத்தை சொல்லவில்லை என்று சொல்லுறாங்க. ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது என்று சொன்னால் ? அனைவரின் சம்மதத்தோடு தான் அது அறிவிக்கப்பட்டது என்பதை எண்ணிக் கொள்ள வேண்டும். ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது.   ஒரு கட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது என்று சொன்னால்?  அதுதான் இறுதி முடிவு. அதை பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்களும் எண்ணிப் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.