திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள செம்மடைப்பட்டி பலக்கானுத்து கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினர் சண்முகம்- காவேரி. இவர்களுக்கு நந்தினி(7) என்ற மகள் இருந்துள்ளார். நந்தினி 7ஆம் வகுப்பு படித்து வந்தபோது அவரது காதில் கட்டி ஒன்று ஏற்பட்டு அடிக்கடி வலியால் துடித்துள்ளார்.

இதனால் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் தேதி நந்தினியை ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் மல்டி லெவல் மருத்துவமனையில் அவரது பெற்றோர்கள் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனை அடுத்து நந்தினியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், சிகிச்சைக்காக முன்பணம் ரூபாய் 20000 கட்ட வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

அதன் பின் பணத்தை பெற்றோர்கள் கட்டிய பிறகு நந்தினிக்கு டாக்டர்கள் நாச்சிமுத்து, சுதாகர், தீபக் ஆகிய 3 பேரும் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஆனால் அறுவை சிகிச்சை செய்து முடித்த சிறிது நேரத்திலேயே நந்தினிக்கு காதிலிருந்து தொடர்ந்து ரத்தம் வந்து கொண்டே இருந்துள்ளது.

அதிக ரத்தம் வெளியேறியதால் நந்தினி மயக்கமடைந்துள்ளார். இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர்கள் அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் நந்தினியை பரிசோதித்த மருத்துவர் நந்தினி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இது குறித்து பெற்றோர்கள் தங்களது மகளுக்கு தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பாதிக்கப்பட்ட நந்தினியின் தரப்பு வக்கீல்கள் ஆரோக்கிய செல்வ ரமேஷ் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் வாதிட்டு வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த வழக்கு குறைதீர் ஆணைய தலைவர் சித்ரா மற்றும் உறுப்பினர் பாக்கியலட்சுமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கில் தவறான சிகிச்சையால் சிறுமி உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனை அடுத்து குறைதீர் ஆணைய தலைவர் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ரூபாய் 30 லட்சம், டாக்டர் நாச்சிமுத்து ரூபாய் 4லட்சம்,  டாக்டர்கள் சுதாகர், தீபக் இருவரும் தலா  ரூபாய் 3 லட்சம் என மொத்தம் ரூபாய்  40 லட்சம் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.மேலும் அறுவை சிகிச்சைக்கு அவர்கள் முன்பணமாக செலுத்திய ரூபாய் 20 ஆயிரம் பணத்தையும் செலுத்த வேண்டும். இதனை 2 மாதத்திற்குள் வழங்காவிட்டால் மேலும் 12%வட்டியுடன் பணத்தை திருப்பிக் கொடுக்க நேரிடும் எனவும் உத்தரவிட்டனர்.