சென்னையில் வருகின்ற 31ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் ஃபார்முலா 4 கார்பந்தயம் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை 8,000 பேர் வரை அமர்ந்து பார்க்கும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதோடு போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படாதவாறு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். அதோடு ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெறும் போட்டியை மட்டும் பொதுமக்கள் அனைவரும் இலவசமாக பார்த்துக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் உதயநிதி சமீபத்தில் அறிவித்தார். ஆனால் இந்த போட்டிகளை நடத்தக்கூடாது என எதிர் கட்சிகள் விமர்சித்து வருகிறது.

இது தொடர்பாக தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாத் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் எப்ஐஏ சர்வதேச ஆட்டோமொபைல் அமைப்பு சான்று பெறாமல் கார்பந்தயத்தை நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியது. இந்த சான்றிதழ் இல்லாமல் போட்டி நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்ற ஆணைப்படி அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இன்று மாலை 4.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது. மேலும் அதன்படி தற்போது ஃபார்முலா 4 கார்பந்தயத்தை நடத்த எந்தவித தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே சமயத்தில் எப்ஐஏ சர்வதேச அமைப்பின் சான்றிதழ் இல்லாமல் பந்தயத்தை நடத்தக்கூடாது எனவும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.