தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இந்நிலையில் நடிகை நயன்தாரா தற்போது தன்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, நான் நடிகையாக பயணித்து வரும் இந்த பாதையில் மகிழ்ச்சி மற்றும் வெற்றியின் அனைத்திற்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடிதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பதற்கான உள்ளார்ந்த ஆசையாக இருக்கட்டும். நீங்கள் என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறீர்கள். அன்பு மிகுதியால் இப்படி அழைப்பதை நினைத்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.

ஆனால் இனி என்னை யாரும் லேடிசூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம். ஏனெனில் என்னுடைய பெயர் தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அது மட்டும் தான் என்னை ஒரு தனிநபராகவும் நடிகையாகவும் குறிக்கிறது. பட்டங்களும் விருதுகளும் மதிப்பு மிக்கவை தான் ஆனால் அது சில நேரங்களில் நம்மை வேலையில் இருந்தும் கலைத்தொழிலில் இருந்தும் ரசிகர்களிடமிருந்தும் நம்மை பிரிக்கிறது. எனவே இனி என்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்வதாக பதிவிட்டுள்ளார். மேலும் இதற்கு முன்னதாக நடிகர் அஜித்குமார் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என கூறிய நிலையில் கமல்ஹாசன் உலக நாயகன் பட்டத்தை துறந்தார். அந்த வரிசையில் தற்போது நயன்தாராவும் தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என கூறியுள்ளார்.