அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் திமுக மட்டும் தான் எங்களுக்கு எதிரி வேறு எந்த கட்சிகளும் எங்களுக்கு எதிரி கிடையாது என்றார். அதன் பிறகு பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு கூட்டணி தொடர்பாக இன்னும் ஆறு மாதங்களுக்கு பிறகு பதில் சொல்கிறேன் என்று கூறினார். இதன் மூலம் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை மறைமுகமாக எடப்பாடி பழனிச்சாமி உறுதிப்படுத்தியதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பாக ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் கூறியதாவது, 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது தான் எங்களுடைய ஒரே நோக்கம். எங்களுக்கு அதிமுக எதிரி கிடையாது. தேர்தலுக்கு இன்னும் நாள் இருப்பதால் தேசிய தலைமை அது பற்றி முடிவு செய்யும். கண்டிப்பாக வரவிருக்கும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான கூட்டணியை அமைக்கும். அதனை நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள் என்றார். மேலும் இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை இருவருமே அதிமுக பாஜக கூட்டணியை மறைமுகமாக உறுதிப்படுத்தியதாகவே கூறப்படுகிறது.