புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி யாரோ ஒருவரை முதல்வராக நாங்கள் ஏன் பாடுபட வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு பல கட்சிகள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் அது முதல் கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

ஆனால் அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிவரும் நிலையில் சமீபத்தில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியான போது அமித்ஷா தேசிய ஜனநாயக வென்றால் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என்றார். ஆனால் இதனை எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்ட நிலையில் பெரும்பான்மை பெறாவிட்டாலும் கூட அதிமுக மட்டும் தான் தனித்தே ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தற்போது கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்பதால் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் அதனை வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

இதன் காரணமாக அதிமுக கூட்டணியிலிருந்து புதிய தமிழகம் வெளியேற இருப்பதாக கூறப்படும் நிலையில் ஏற்கனவே தேமுதிகவும் வெளியேற உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் பாஜகவுடன் கூட்டணியில் இருப்பீர்களா என்ற கேள்விக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதில் சொல்ல மறுத்ததால் மொத்தம் மூன்று கட்சிகள் விலகுவதாக கூறப்படுகிறது.