வங்காள தேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில் அதனை எதிர்த்து மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் பலர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு இட ஒதுக்கீடை ரத்து செய்வதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து போராட்டம் முடிவடைந்த நிலையில் நேற்று பிரதமர் சேக் ஹசீனா இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார். இதனால் மீண்டும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை எதிர்த்து ஆளும் கட்சியினரும் போராட்டம் நடத்திய நிலையில் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.

பின்னர் போலீசார் கலவரக்காரர்களை அடக்க முயற்சித்த நிலையில் ஒரு வணிகவளாகத்திற்கு தீ வைக்கப்பட்டது. இந்த கலவரத்தில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் போராட்டத்தை நிறுத்துவதற்கு ஒரே வழி பிரதமர் சேக் ஹசீனா ராஜினாமா செய்வது மட்டும்தான். ஏனெனில் போராட்டக்காரர்கள் அவருடைய ராஜினாமாவை தான் கோரிக்கையாக வைத்துள்ளனர். இதற்கிடையில் இன்று ராணுவ தளபதி போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவித்துள்ளார். மேலும் இதனால் சேக் ஹசீனா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் வங்கதேசத்தில் இராணுவம் இடைக்கால ஆட்சி அமைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.