தமிழகத்தில் பெஞ்சல் புயல் நேற்று இரவு கரையை கடந்தது. இருப்பினும் புதுச்சேரியில் புயல் நகராமல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்தப் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புயல் கரையை கடந்தாலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் 23 மாவட்டங்களில் மிக கனமழை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் கரையை கடந்தாலும் தமிழ்நாட்டிற்கு இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் பிறகு புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று தமிழ்நாட்டில் அதன்படி புதுச்சேரி, கடலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இன்று 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி, நாமக்கல், சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 12 முதல் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பொழிய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ‌8 மாவட்டங்களில் 11 முதல் 17 செண்டிமீட்டர் அளவிற்கும் மழை பொழிய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி காரைக்கால், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், நாகை, திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.