தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தற்போது ஒரு எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ளார். அவர் பெண்கள் பாதுகாப்புக்காக தனி இணையதளம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம் முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது. பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறை சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட செய்திகள் துயரத்தை தருவதாக இருக்கிறது.

பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுக்க நீதித்துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு அரசு தனி இணையதளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை தெரிவித்துள்ளது. இதற்கு மதிப்பளித்து தமிழக அரசு தனி இணையதளத்தை உருவாக்கி பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும் இதனை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்திக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.