திருவள்ளூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 30 ஜோடிகளுக்கு இன்று திருமணம் நடைபெற்ற நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி முடித்தார். அப்போது மகளிர் உரிமை தொகை தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதாவது இன்னும் 3 மாதங்களில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் இன்னும் கூடுதலான பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான பெண்கள் பயன்பெறும் நிலையில் புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்கள் மற்றும் தகுதியுள்ள பெண்களும் கூடுதலாக திட்டத்தில் இணைக்கப்படுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது துணை முதல்வர் உதயநிதி இன்னும் 3 மாதத்தில் கூடுதல் பெண்கள் இணைக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.