கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் என்ற பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ருதி பாபு என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு ஸ்ருதி தன் கணவர் வீட்டில் வசித்து வந்த நிலையில் திடீரென நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக், அவருடைய தாயார் செண்பகவல்லி மற்றும் ஸ்ருதியின் உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தன்னுடைய மாமியார் தொல்லை தாங்க முடியாமல் சுருதி தற்கொலை செய்து கொண்டதாக இறப்பதற்கு முன்பு தன் தாயாருக்கு whatsappபில் ஆடியோ அனுப்பியது தெரியவந்தது. அந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் என்னுடைய மாமியார் அடிக்கடி என் அம்மா வீட்டில் விட வேண்டும் என்று கூறும் நிலையில் எனக்கு வாழாவெட்டியாக இருப்பதில் விருப்பமில்லை.

என் கணவருக்கும் எனக்கும் இதுவரை எந்த பிரச்சனையும் வரவில்லை. ஆனால் என் மாமியார் தான் பிரச்சனை செய்கிறார். என் கணவருடன் சேர்ந்து நான் வெளியே செல்லக்கூடாது. அவருடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அவர் பக்கத்தில் அமரக்கூடாது. எச்சில் தட்டில் தான் சாப்பிடணும் என்றெல்லாம் கொடுமைப்படுத்துகிறார். என்னுடைய நகை முழுவதையும் இரு டப்பாக்களில் அடைத்து என் கணவரிடம் கொடுத்துள்ளேன். அதனை அவரிடம் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள். என்னுடைய இறுதி சடங்கை தயவு செய்து இவர்கள் கட்டுப்பாடு படி செய்யாதீர்கள். என் உடம்பை கோவைக்கு கொண்டு செல்லுங்கள்.

இல்லையெனில் இங்கு மின் தகன மேடைக்கு கொண்டு செல்லுங்கள். அங்கு ஒரு ஸ்விட்ச் ஆன் செய்தால் போதும். அதன்பின் ஒரு பெண்ணின் பெயரை குறிப்பிட்டு அவர் கல்யாணத்துக்கு நான் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். முடிந்தால் என் நகைகளை அந்த பெண்ணுக்கு கொடுங்கள். என்னை மன்னிச்சிருங்க அம்மா. எனக்கு வாழாவெட்டியாக வந்து வீட்டில் இருக்க விருப்பமில்லை. அவங்க என்ன வீட்டுக்கு போக சொல்றாங்க. அப்படி போனா மீண்டும் வரக்கூடாது என்று சொல்கிறார்கள். மேலும் எனக்கு அப்படி வாழ்வதில் இஷ்டமில்லை என்பதால் நான் இந்த முடிவை எடுக்கிறேன் என்று அந்த பெண் உருக்கமாக கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தன்னுடைய மாமியார் செண்பகவல்லி தான் அனைத்திற்கும் காரணம் என்று தெரிவித்த நிலையில் கைது நடவடிக்கைக்கு பயந்து தற்போது செண்பகவல்லி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது மருத்துவமனையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்