திமுக எம்பி ஜெகத்ரட்சகன் சவீதா குழுமத்தில் நடைபெற்ற வருமான வரித்துறையினர் சோதனையில் ரூபாய் 32 கோடி ரொக்கம், ரூபாய் 28 கோடி தங்கம் உட்பட 60 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் வீடு உள்ளிட்ட அவரது சொந்தமான இடங்களில் கடந்த வாரம்  வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனையானது தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது. கடந்த வாரம் 5ம் தேதி காலை 6:30 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனையானது ஒன்பதாம் தேதி நள்ளிரவு முடிவடைந்தது. என்னென்ன விதமான வரிஏய்ப்புகள் நடைபெற்றது என்பது குறித்து முழுமையாக அவரது சொந்தமான இடங்கள், அலுவலகங்கள், வீடு, தலைமை அலுவலகம், பாலாஜி பல் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை சோதனையில் சுமார் 40 இடங்களில் 5 நாட்கள் சோதனை நடைபெற்றது.

அதே போல் சவீதா கல்வி குழுமங்களுக்கு சொந்தமான 40 இடங்களிலும் சோதனை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அதனை பரிசோதனை செய்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சற்று முன்னதாக ஜெகத்ரட்சகன் மற்றும் அவர் தொடர்புடைய இடங்கள் மட்டுமல்லாமல் சவீதா குழுமத்தில் நடைபெற்ற வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் சோதனை முடிவில் 32 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் ரூபாய் 28 கோடி மதிப்பிலான தங்க கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதேபோல ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் 400 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத கட்டண ரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கணக்கில் வராத 300 கோடி ரொக்கம் தனிப்பட்ட கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அறக்கட்டளைகளில் இருந்து ரூபாய் 300 கோடி வேறு வணிகத்திற்கு திருப்பப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்த சோதனை 9ஆம் தேதி முடிவடைந்த நிலையில், அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களை முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இந்த தகவல் ஆனது வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக சம்மன் அனுப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது..