நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீப காலமாக நிர்வாகிகள் பலர் விலகி வருகிறார்கள். குறிப்பாக மாவட்ட செயலாளர்கள் உட்பட கட்சியின் நிர்வாகிகள் என கூண்டோடு விலகி வருகிறார்கள். அவர்கள் திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் என மாற்றுக் கட்சியில் இணைந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நாகை மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் 11 பேர் விலகுவதாக அறிவித்துள்ளனர். அதோடு 50-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்களும் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகை தொகுதி பொறுப்பாளர் நாகராஜன், செய்தி தொடர்பாளர் அகமது, இளைஞர் அணி செயலாளர் பிரவீன் உட்பட முக்கிய நிர்வாகிகள் 11 பேரும் கட்சியின் தொண்டர்கள் 50-க்கும் மேற்பட்டோரும் விலகுவதாக அறிவித்துள்ளனர். இவர்கள் ‌ செய்தியாளர்களை சந்தித்தபோது, சீமான் மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்தனர்.

குறிப்பாக கட்சியிலிருந்து விலகுபவர்கள் மீது திருட்டுப்பழி சுமத்தப்படுவதாக அவர்கள் கூறினர். அதன் பிறகு நாகை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி வளர்ந்து வந்த வேகத்தை விட தற்போது அதிக அளவில் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கட்சியில் ஒரு குடும்பம் என்று கூறிவிட்டு சிறு சிறு பிரச்சனைகள் வந்தால் சரி செய்து கொள்ளலாம். ஆனால் கட்சியில் இருக்கக்கூடிய நிர்வாகிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்து அடிமைகளாக நடத்தக்கூடிய சூழ்நிலை இருப்பதோடு பொறுப்பாளர்கள் சரியில்லை. மேலும் கட்சியிலிருந்து நிர்வாகிகள் விலகும் போது அவர்கள் மீது திருட்டுப்பழி சுமத்துவதாகவும், நாம் தமிழர் கட்சியில் முக்கிய நிர்வாகிகள் இல்லாமல் பொதுக்கூட்டம் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாகவும் கூறியுள்ளனர்.