
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பெங்கல் புயலாக வலுப்பெற உள்ளது. இது 8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து நிலையில் தற்போது 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் சின்னம் நாகையிலிருந்து 470 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 470 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதலே மழை பெய்து வருகிறது.
இதனால் நேற்று தமிழ்நாட்டிற்கு ரெட் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது 27 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பொழிய வாய்ப்பு உள்ளதால் ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கிலோமீட்டர் வேகத்தில் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இன்று தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், தஞ்சை, அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.