ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண், அள்ளூரி சீதாராமராஜு மாவட்டம் அரக்கில் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தை திடீரென முடித்துக்கொண்டு, சிங்கப்பூருக்குப் பயணிக்கத் திட்டமிட்டுள்ளார். காரணம், அவரது இளைய மகன் மார்க் சங்கர் பவனோவிச், சிங்கப்பூரில் உள்ள தனது பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்துள்ளார். இந்த விபத்தில் மார்க் சங்கரின் கைகள், கால்கள் காயமடைந்ததோடு, புகை நுரையீரலுக்குள் புகுந்ததால் தீவிர காயம் அடைந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன், பவன் கல்யாணிடம்  அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் அவரைச் சிங்கப்பூருக்கு விரைவில் செல்லுமாறு ஆலோசனை அளித்துள்ளனர். இருப்பினும், அவர் அரக்கு அருகே உள்ள குரிடி கிராமத்தில் முன்பே வாக்குறுதி அளித்திருந்ததால், அந்த கிராம மக்களை சந்தித்து, அங்கு திட்டமிட்டிருந்த வளர்ச்சி நடவடிக்கைகளை முடித்து வைத்த பிறகே சிங்கப்பூர் செல்லுவதாக அவர் தெரிவித்தார்.

மார்க் சங்கர் தற்போது தனது தாய் அன்னா லெஜ்னேவாவுடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அன்னா லெஜ்னேவா கடந்த 2024ஆம் ஆண்டு சிங்கப்பூர் நெஷனல் யுனிவர்சிட்டியில் இருந்து MA பட்டம் பெற்றார். அதன்பிறகு, மார்க் சங்கரும் அவருடன் சேர்ந்து அங்குதான் வசித்து வருகிறார். இந்த தீவிபத்து அவரது பள்ளியில் நடந்தது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகனுக்குக் காயம் ஏற்பட்டதாகத் தெரிய வந்ததிலிருந்து, ஜனசேனா கட்சியினரும், பவன் கல்யாணின் ரசிகர்களும் பெரும் கவலையில் உள்ளனர். பவன் கல்யாண் தற்போது விசாகப்பட்டினத்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.