
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஆண்டின் முதல் நாள் இன்று தொடங்கிய நிலையில் ஆளுநர் ரவி சபையை விட்டு வெளியேறிவிட்டார். அதன் பிறகு ஆளுநருக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவையை விட்டு வெளியேற்றப்பட்டனர்.அதன்பிறகு அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து யார் அந்த சார் என்று கோஷம் எழுப்பியதால் அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் பாமகவினரும் இந்த விவகாரத்திற்காக வெளியேறினர். இதைத்தொடர்ந்து தற்போது பாஜக எம்எல்ஏக்களும் அவையை விட்டு வெளியேறிவிட்டனர்.
அதாவது சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவி சார் என்ற ஒருவரிடமும் ஞானசேகரன் தொடர்பில் இருக்க வேண்டும் என்று தன்னை கட்டாயப்படுத்தியதாக கூறினார்.
ஆனால் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சார் என்ற ஒருவர் கிடையாது எனவும் மாணவியை மிரட்டுவதற்காக ஞானசேகரன் அப்படி பேசியது போல் நாடகமாடியதாகவும் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் ஞானசேகரன் மட்டும் தான் குற்றவாளி என்று காவல்துறை கூறும் நிலையில் எதிர்க்கட்சிகள் சார் என்ற ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தொடர்ந்து கூறி வருகிறது. அதன் பிறகு குற்றவாளி திமுகவை சேர்ந்தவன் என்பதால் இந்த வழக்கை மூடி மறைக்க பார்க்கிறார்கள் எனவும் குற்றச்சாட்டு தெரிவிக்கிறார்கள்.
இதன் காரணமாகத்தான் தற்போது பாமக, பாஜக மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேறிய நிலையில் அவர்கள் சட்டசபை வளாகத்தில் யார் அந்த சார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.