
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் மகா கும்பமேளா நடைபெறுகிறது. இந்த கும்பமேளா விரைவில் நிறைவடையும் நிலையில் தற்போது பக்தர்களின் கூட்டம் என்பது அலை மோதுகிறது. இதுவரை கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடியுள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் கும்பமேளாவுக்கு செல்கிறார்கள். இதனால் ரயில்களில் கூட்டம் என்பது அலை மோதுகிறது. சமீபத்தில் கூட டெல்லியில் கும்பமேளாவுக்கு செல்வதற்காக பக்தர்கள் ரயிலில் கூட்டமாக ஏறிய போது கிட்டத்தட்ட 18 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இதன் காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில்வே அதிகாரிகள் துரித நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசிக்கு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்றனர்.
இவர்கள் திரும்பி வருவதற்காக வாரணாசியில் ரயில் ஏற முயன்ற போது கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் அவர்கள் ரயிலில் ஏற முடியாமல் தவித்து வருகிறார்கள். அதாவது கும்பமேளாவுக்கு சென்றவர்கள் முன்பதிவு செய்த ரயில் பெட்டிகளில் ஏறியதால் மாற்றுத் திறனாளி கிரிக்கெட் வீரர்களால் ரயிலில் ஏற முடியவில்லை. அதன்படி 6 தமிழ்நாடு வீரர்கள் உட்பட 11 மாற்றுத் திறனாளி வீரர்கள் ரயில்வே நிலையத்தில் தவிக்கும் நிலையில் இது தொடர்பாக உடனடியாக தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போது அவர்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.மேலும் ரயிலில் ஏற முடியாமல் தவித்த கிரிக்கெட் வீரர்கள் தமிழக அரசு உதவ வேண்டும் என்று வீடியோ வெளியிட்ட நிலையில் உடனடியாக அரசு உதவ முன்வந்து விமானத்தில் அவர்களை சென்னைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கொடுத்துள்ளது.