பிரிட்டனை சேர்ந்த Lloyds வங்கி குழுமம் 2025 இறுதிக்குள் 4000 தகவல் தொழில்நுட்ப பொறியாளர்களை ஹைதராபாத்தில் பணியமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் வங்கியின் உலகளாவிய IT பணியாளர்களில் பாதி இந்தியாவிலேயே இருக்கப் போகின்றனர். இந்த திட்டம் வங்கியின் £4 பில்லியன் மதிப்புள்ள டிஜிட்டல் மாற்று திட்டத்தின் ஒரு பகுதியாகும். அதோடு இது செயல்பாட்டு செலவுகளை குறைக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த திட்டம் பிரிட்டனில் உள்ள 6000 IT பணியாளர்களின் வேலையை பாதிக்கக்கூடும் வகையில் உள்ளது. இதைத்தொடர்ந்து Lloyds வங்கி பிரிட்டனில் 1200 புதிய உயர் தொழில்நுட்ப பணியிடங்களை உருவாக்க உள்ளது.

ஆனால் அது ஊழியர்கள் புதிய பணியில் சேர்வதற்கு, போட்டியில் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினை எதிர்த்து தொழிற்சங்க தலைவர்கள் Llyods வங்கி இந்தியாவிற்கு பதிலாக உள்ளூர் பணியாளர்களை பயிற்றுவித்து தகுதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும் Natwest, Nationwide போன்ற பிற பிரிட்டிஷ் வங்கிகள் போன்று Llyods வங்கியும் IT வேலைகளை இந்தியாவிற்கு மாற்றும் முயற்சியில் உறுதியாக உள்ளது. உலகளாவிய இந்த தொழில்நுட்பத்தின் மூலம் Llyods வங்கி தனது டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும் இந்தத் திட்டத்தினால் இந்தியர்கள் பயன் அடைந்தாலும்  பிரிட்டனில் உள்ள பணியாளர்களின் எதிர்காலம் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.