பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு சவுகரியமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது BSNL 4ஜி சிம் கார்டை நேரடியாக அவர்களுடைய வீட்டில் டெலிவரி செய்யும் வசதியாகும். இந்த புதிய சேவை, வாடிக்கையாளர்களுக்கு கடைதொடர்பு இல்லாமல், ஆன்லைன் மூலமாக சிம் கார்டை ஆர்டர் செய்யும் சுலபத்தையும், அதை குறுகிய நேரத்தில் பெறும் அனுபவத்தையும் வழங்குகிறது.

BSNL-இன் புதிய சேவையின் மூலம், வாடிக்கையாளர்கள் கடைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், வெறும் 10 நிமிடங்களில் சிம் கார்டை பெற முடியும். இதற்காக, BSNL ஆன்லைன் ஆர்டர் செய்யும் வசதியை ஏற்படுத்தும் ப்ரூன் எனும் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. இது புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய நன்மையாகும். சிம் கார்டை ஆர்டர் செய்வது மிகவும் எளிது.

ப்ரூன் இணையதளத்தில் “Buy Sim Card” என்பதைக் கிளிக் செய்து, BSNL நெட்வொர்க் ஆபரேட்டரை தேர்ந்தெடுக்கலாம். அதன்பின், FRC திட்டங்களில் இருந்து தேவையான திட்டத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் பெயர், மொபைல் நம்பர், முகவரி ஆகியவற்றை பதிவு செய்தால், சிம் கார்டு உங்களது வீட்டிற்கே வந்து சேரும். BSNL இந்த சேவையை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், பல தனியார் நிறுவனங்கள் தங்களுடைய ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி உள்ளன.

அதனால், சில வாடிக்கையாளர்கள் தங்கள் ஆப்பரேட்டரை BSNL-க்கு மாற்றியுள்ளனர். BSNL-யின் கட்டணங்கள் குறைவாகவே இருப்பதால், வாடிக்கையாளர்கள் இதை ஒரு சிறந்த விருப்பமாக கருதுகிறார்கள். BSNL அதன் 4ஜி நெட்வொர்க் உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக, அக்டோபர் 2024-க்குள் 80,000 டவர்களை நிறுவுவதுடன், மார்ச் 2025-க்குள் கூடுதலாக 21,000 டவர்களை நிறுவும் திட்டத்தை அறிவித்துள்ளது.