சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தார். இவர் பெங்களூரு- சென்னை காவிரி எக்ஸ்பிரஸ்ஸில் பயணம் செய்தார். இந்த நிலையில் ரயில் இன்று காலை அம்பத்துரை கடந்து வந்து கொண்டிருந்தது. அப்போது அந்தப் பெண் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது மெதுவாக இளைஞர் ஒருவர் பெண்ணின் கைப்பையை பிடித்து இழுத்துள்ளார். இதனை உணர்ந்த பெண் சட்டென விழித்து கத்தி கூச்சல் இட்டுள்ளார்.

இதனால் அருகில் இருந்த பயணிகள் அவரை பிடிக்க  முயன்ற போது கைப்பையை ஜன்னல் வழியாக வெளியே தூக்கி வீசி உள்ளார். இதனை அடுத்து ரயில்வே காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் கைப்பையை கண்டுபிடித்து பெண்ணிடம் ஒப்படைத்தனர். அந்த கைப்பையில் ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்துள்ளது தெரியவந்தது.

இதனை அடுத்து கைப்பையை திருட முயன்ற குற்றவாளி வாலிபரை கைது செய்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த காவலர் வசந்தகுமார் தான் அந்த இளைஞர் என தெரிய வந்தது. ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை திருட முயன்றது அப்பகுதி காவலர் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து காவல்துறையினர் காவலர் வசந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர் இதுபோன்று ,ஏதேனும் வழக்குகளில் சிக்கி உள்ளாரா? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.