
வாணியம்பாடி பகுதியில் லாரி ஓட்டுநர் ஒருவரிடம் முன்னாள் இந்து மகா சபா நிர்வாகி மற்றும் அவரது நண்பர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னையில் அஜ்பூர் ரஹ்மான் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில நிர்வாகி ஆவார்.
இந்நிலையில் கண்டெய்னர் லாரியில் தனது பசு மாடுகளை விற்பனை செய்வதற்காக ஆந்திராவில் இருந்து பொள்ளாச்சிக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது லாரி வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி பகுதியில் உள்ள சுங்க சாவடியை கடக்கும் போது அந்த பகுதியை சேர்ந்த முன்னாள் இந்து மகா சபா நிர்வாகியான ஜெகன் என்பவர் தனது சக நண்பர்களுடன் சேர்ந்து மாடுகளை ஏற்றி சென்ற லாரியை தடுத்து நிறுத்தியுள்ளார்.
அதன்பின் இறைச்சிக்காக மாடுகள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று கேட்டு தகராறு செய்த அவர்கள் லாரி ஓட்டுனர் செந்தில் குமாரிடம் பணம் கேட்டு அவர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் ஓட்டுனர் அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இவர் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இந்து மகாசபா முன்னாள் நிர்வாகி ஜெகன் மற்றும் அவரது நண்பர்கள் ஆன கார்த்திக், மணியரசு ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அதன்பின் அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கப்பதிவு செய்யப்பட்டது. அதே சமயம் லாரியில் மாடுகள் தண்ணீர் வசதி மற்றும் காற்று வசதி இல்லாமல் சித்திரவதை செய்து கொண்டு செல்வது போல் அளித்த காட்சியால் ஓட்டுநர் செந்தில்குமார் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதன் பின் லாரியில் இருந்த மாடுகளை பராமரிப்பதற்காக விஷமங்கலம் பகுதியில் உள்ள கோசலைக்கு காவல் துறையினர் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.