கடலூர் மாவட்டத்தில் உள்ள எலவத்தடி கிராமத்தில் சத்தியசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தரவள்ளி(33) என்ற மனைவி உள்ளார். இவர் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சௌந்தரவள்ளி பண்ருட்டியில் இருக்கும் நகை கடையில் 5 பவுன் தாலி சங்கிலி வாங்கியுள்ளார். இதனையடுத்து அதனை பையில் வைத்துக்கொண்டு நெய்வேலி செல்லும் பேருந்தில் ஏறினார்.
பின்னர் காடாம்புலியூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய சௌந்தரவள்ளி தனது பையை திறந்து பார்த்துள்ளார். அப்போது தங்க நகை காணாமல் போனது தெரியவந்தது. பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ தங்க சங்கிலியை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சௌந்தரவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.