
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கிடையில் இந்த சம்பவத்தில் வேறு ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையை எதிர்த்து எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதோடு யார் அந்த சார்? என்று கேட்டு நேர்மையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, பெண்களுக்கு எதிராக இத்தனை கொடூரங்கள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் நடைபெறுவதாக தினமும் நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வரும்போது காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மௌன சாமியாராக இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.