கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை அருகே உள்ள வானமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் மது (28) என்பவருக்கு சான்விகா என்ற 4 வயது மகள் உள்ளார். இவர் அதே கிராமத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார்.

இவர் பள்ளி இடைவேளை நேரத்தில் பள்ளி மாணவர்களுடன் சிறுநீர் கழிக்க சென்ற போது அந்த சாலை வழியாக சென்ற டெம்போ வாகனம் சிறுமி மீது மோதியதில் தலையில் அடிபட்டு கதறி துடித்துள்ளார். இதைக் கண்டு அலறி அடித்துக் கொண்டு வந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிர் இழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை மேற்கொண்டனர்.

அங்கன்வாடி மையத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட கண்காணிப்பாளர் பரிமளம் மற்றும் அங்கன்வாடி பணியாளர் வரலட்சுமி ஆகிய இருவரையும் மாவட்ட ஆட்சித் தலைவர் சரயு பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார். சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.