நெல்லை அரசு பேருந்தில் மாணவி ஒருவர் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்காக தான் கொண்டு வந்த இசைக் கருவிகளுடன் பயணித்துள்ளார். அப்போது அந்த பேருந்தின் நடத்துனர் மாணவியை தரக்குறைவாக பேசி நடுவழியில் இறக்கிவிட்டுள்ளார்.

நெல்லை வண்ணார்பேட்டையில் இசைக்கருவிகளுடன் அழுது கொண்டு இருந்த கல்லூரி மாணவியை விசாரித்த போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்காக பறை உள்ளிட்ட இசைக்கருவிகளை கொண்டு வந்தேன். நிகழ்ச்சி முடிந்து மீண்டும் இசைக்கருவிகளை வீட்டிற்கு எடுத்து செல்ல புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் ஏறி வந்து கொண்டிருந்தேன்.

பாதி வழியில் வந்த சமயத்தில் நடத்துனரிடம் பயணம் சீட்டு கேட்டதற்கு இசைக்கருவிகளை எடுத்துக்கொண்டு இறங்கி விடுமாறு கூறினார். நான் அவற்றிற்கு தனியாக பயணச்சீட்டு எடுக்கிறேன் என்று கூறிய பிறகும் இசைக்கருவிகளை கீழே இறக்குமாறும் அல்லது வெளியே தூக்கி எறிந்து விடுவேன் என்றும் கூறினார். அதுமட்டுமில்லாமல் பேருந்தில் பயணிகளுக்கு மட்டும் தான் டிக்கெட் தர முடியும், கண்ட கருமத்துக்கு எல்லாம் டிக்கெட் தர முடியாது என தரக்குறைவாக பேசினார்” என மாணவி வருத்தத்துடன் கூறியுள்ளார்.

இதுகுறித்து துறை ரீதியாகா நடத்துனரிடம் விசாரணை நடந்து வருவதாக நெல்லை போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.