சுயிஷா வசந்த் தனது இரண்டு வயது குழந்தையுடன் ஏர் இந்தியா மூலம் புதுடெல்லியில் இருந்து அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் விமானத்தில் மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.சுயிஷா வசந்த் உணவை தனது இரண்டு வயது குழந்தைக்கு கொடுத்து தானும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது முட்டை ஆம்லெட் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. அந்த ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி இருந்ததை கவனிக்காமல் குழந்தைக்கு ஊட்டி விட்டார். திடீரென ஆம்லெட்டில் கரப்பான் பூச்சியை பார்த்ததும் அலறியபடி பணிப்பெண்களை அழைத்து புகார் அளித்தார்.

ஆனால் பணிப்பெண்கள் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. கோபத்தில் சுயிஷா தனது மொபைல் போனில் உணவில் கரப்பான் பூச்சி இருந்ததை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து விமான நிலையத்தில் தரை இறங்கியதும் உணவில் பூச்சி இருந்ததால் நானும் என் குழந்தையும் விஷத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளோம் என புகார் அளித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி மக்கள் பலரும் ஏர் இந்தியாவின் சேவைகளை குறித்து விமர்சித்து வருகின்றனர்.