பாரிசில் உள்ள ஒரு ஜிம்மில் குளிர் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட நைட்ரஜன் வாயு கசியால் 29 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 34 வயது மற்றொரு பெண் கடுமையான சுவாச குறைவால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பாரிஸின் மைய பகுதியில் உள்ள “On Air Gym” ஜிம்மில் திங்கள்கிழமை மாலை நிகழ்ந்தது.

போலீசார் தெரிவித்ததாவது, அவசர சேவையினரால் இரண்டு பெண்களும் மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். உயிரிழந்த பெண் அந்த ஜிம்மில் பணியாற்றியவர் எனவும், சிகிச்சை அறையில் முன்னதாகவே பழுது ஏற்பட்டு, அதே நாளில் சரிபார்க்கப்பட்டிருந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அவர்களை காப்பாற்ற முயன்ற மூன்று நபர்களும் சுவாசப் பிரச்சனையால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பாதுகாப்புக்காக சுமார் 150 பேர் அந்த கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக பாரிஸ் அரசு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. மனித உடலை -110 டிகிரி முதல் -140 டிகிரி செல்சியஸ் வரை குளிர்ச்சியில் வைத்திருக்கும் க்ரயோத்தெரபி சிகிச்சை, தடகள வீரர்கள் மற்றும் விளையாட்டு நிபுணர்களிடம் பிரபலமாக உள்ளது. இருப்பினும், பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படாதால் உயிருக்கு ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.