அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்திலிருந்து தனியார் பேருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து விக்னேஸ்வரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக கஜேந்திரன் என்பவர் பணியில் இருந்துள்ளார். அந்த பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என 60-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் ராயம்புரம் சுடுகாடு அருகே வேகமாக சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் நான்கு வழி சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கல்லூரி மாணவரான கார்த்திக் என்பவர் பேருந்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து இடைபாடுகளில் சிக்கித் தவித்தவர்களை பத்திரமாக மீட்டனர். பின்னர் படுகாயமடைந்த 21 பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.