பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை முன்னிட்டு, இந்திய கடற்படை தங்களது போர் தயார் நிலையை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சமீபத்தில், பல போர்க்கப்பல்கள் நீண்ட தூரத்தில் துல்லியமான தாக்குதலை மேற்கொள்ளும் திறனை நிரூபிக்கும் வகையில் வெற்றிகரமான கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனைகளை நடத்தியதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

 

“இந்திய கடற்படை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எப்படியும் நாட்டின் கடல்சார் நலன்களை பாதுகாக்க தயார் நிலையில் உள்ளது,” என்று கடற்படை செய்தித் தொடர்பாளர் சமூக ஊடகத்தில் கூறினார். இதனுடன், இந்திய கடற்படையின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பலான INS சூரத், அரபிக் கடலில் நடுத்தர தூர இலக்கை வெற்றிகரமாகத் தாக்கியுள்ளது.

MR-SAM பாதுகாப்பு அமைப்பின் இந்த வெற்றிச் சோதனை, இந்திய கடற்படையின் பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் கடற்படையால் திட்டமிடப்பட்டிருந்த ஏவுகணை சோதனைக்கு முன்பாகவே இந்தியா தனது வலிமையை நிரூபித்துள்ளது. இந்திய கடற்படை கூறுகையில், “இது நமது கடல்சார் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்தும் மற்றொரு மைல்கல்” என தெரிவிக்கப்பட்டது.