
தமிழ்நாட்டில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது பேசும் பொருளாக மாறி உள்ளது. மற்றொரு பக்கம் பாமகவில் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாமகவின் தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் சில நாட்களுக்கு முன்பு தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு தானே தலைவராக பொறுப்பேற்பதாக பாமகவின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.
அன்புமணி ராமதாஸ் அக்கட்சியின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்டார். இது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராமதாஸின் ஆலோசனை இல்லாமல் தணிச்சையாக அன்புமணி ராமதாஸ் முடிவு எடுத்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கு பாமக பொருளாளர் திலகபாமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது, பாட்டாளி மக்கள் கட்சியின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை அவர் எடுத்த எல்லாம் முடிவுகளும் சரி. அவரின் அன்பினை ருசித்தவன் நான். ஆனால் இந்த முடிவு தவறு அன்பு தானே எல்லாம் என பதிவிட்டுருந்தார். இதனை கண்டித்து பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, மருத்துவர் ராமதாஸின் முடிவை விமர்சித்த திலகபாமா பாமகவில் இருந்து வெளியேற வேண்டும். இவர் நேற்று வந்தவர், பாமக கொள்கையை பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. அரசியல் என்னவென்றே தெரியாத அரைவேக்காடு. நெஞ்சிலே கொஞ்சமும் நன்றி உணர்ச்சி இல்லாமல் ராமதாசை வசைப்பாடி இருக்கும் திலகபாமா உடனடியாக கட்சியிலிருந்து வெளியேற வேண்டும்.
அதுதான் அவருக்கு நல்லது. நம் கட்சியை அழிப்பதற்காக வெளியில் இருந்து வந்த நோய்க்கிருமி தான் அவர். போராட்டங்கள் பேரணிகள் மாநாடுகள் பொதுக்கூட்டங்கள் என எழுதிலும் கலந்து கொள்ளாதவர் என்று அவர் பதில் அளித்தார்.