
தமிழக காவல்துறையில் 615 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக சீருடை பணியாளர் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் பணியில் இருக்கும் காவலர்கள், விளையாட்டு வீரர்கள், காவலர்களின் வாரிசுகள் போன்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பணியில் இருக்கும் காவலர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 123 பணியிடங்கள் பணியில் இருக்கும் காவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களால் அந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியவில்லை என பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணியில் இருக்கும் காவலர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்காக அவர்கள் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த தண்டனைகளின் காரணமாக அவர்களால் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் காவலர்கள் மீது இருக்கும் துறை சார்ந்த அனைத்து சிறு தண்டனைகளும் ரத்து செய்யப்படும் என அறிவித்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 30-ஆம் தேதி கடைசி நாள். அதற்குள் திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி அனைத்து காவலர்களும் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.