கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோமான்விளை பகுதியில் மார்ட்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகர்கோவில் வெட்டடூர்ணிமடம் பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் கிட்னியில் இருக்கும் கல்லை எடுக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக 60 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்தனர். இதனையடுத்து கிட்னியில் இருந்த கற்கள் முழுவதுமாக அகற்றப்படவில்லை.

இதனால் மீண்டும் வலி ஏற்பட்டு மார்ட்டின் வேறொரு மருத்துவமனைக்கு சென்று அறுவை சிகிச்சை செய்து மீதியிருந்த கற்களை அகற்றினார். முறையாக சிகிச்சை அளிக்காததால் நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனையிடம் இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் அவர்கள் சரியான விளக்கம் அளிக்கவில்லை. இதனால் மார்ட்டின் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் குறைதீர் தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் மருத்துவமனையின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி மார்ட்டினுக்கு 1 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு, சிகிச்சைக்காக செலவழித்த தொகை 90 ஆயிரம், வழக்கு செலவு 5 ஆயிரம் என மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பணத்தை ஒரு மாத காலத்திற்குள் மருத்துவமனை நிர்வாகத்தினர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.