
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் பாந்த்ரா பகுதியில் குர்லா காம்ப்ளக்ஸில் வால்மீகி நகரில் வசித்து வந்தவர் ராஜு முக்தா(65). இவரது மகன் நர்சிங் முக்தா (31). நர்சிங் அப்பகுதியில் வீட்டு பராமரிப்பு வேலை செய்து வந்துள்ளார். தந்தையான ராஜூ எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலிருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ராஜு தனது மனைவியை சிறுசிறு காரணங்களுக்காக அடிக்கடி அடித்து துன்புறுத்தி உள்ளார். இதேபோன்று கடந்த மார்ச் 5ஆம்தேதி சனிக்கிழமை அன்று வழக்கம் போல ராஜு வீட்டில் தனது மனைவியை திட்டி அடித்து துன்புறுத்தி உள்ளார்.
இதனால் தனது தாயை அடிப்பதை பார்த்து கோபமடைந்த நரசிங் தனது தந்தையின் மார்பில் கத்தியால் குத்தி விட்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.இது குறித்து அறிந்த உடனேயே அக்கம் பக்கத்தினர் ராஜுவை பாபா மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் ராஜுவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து ராஜுவின் மகள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மறுநாள் காலை நரசிங்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
அதன் பின்னர் நரசிங் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தாயை துன்புறுத்தியதற்காக மகன் தந்தையை குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.