சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரம் ஜி.எம் பேட்டை பகுதியில் கார்த்திக்(38) என்பவர் வசித்து வருகிறார். இவர் அச்சகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரேவதி(34) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கார்த்திக் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம் போல தகராறு ஏற்பட்டபோது குடிபோதையில் கார்த்திக் தனது மனைவி மற்றும் மகளை கைகளால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனையடுத்து மண்ணெண்ணையை மனைவி மற்றும் மகள் மீது ஊற்றி கார்த்திக் தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கார்த்திக்கை தடுத்து நிறுத்தி தாய் மற்றும் மகளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்